சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்!

Must read

பெங்களூரு:
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
mandia
இதனால்  மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் மாண்டியா – பெங்களூரு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில் பெங்களூருவில் கலவரம் ஏற்படுவதை தடுக்க காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை கர்நாடகா ஏற்க வில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடகா அரசு சிறப்பு சட்டசபையைக் கூட்டி  தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும் நேற்று சீராய்வு மனுவும் தாக்கல் செய்தது.  மனுவில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கடந்த 20ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்றும்,  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தான் திறக்க இயலும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி காவிரியில் கர்நாடகா அரசு நீரைத் திறந்துவிடும் வரை அம்மாநில அரசு தாக்கல் செய்யும் எந்த மனு மீதும் விசாரணை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தது.
தண்ணீர் திறக்காமல் இருக்க காலதாமதம் செய்யும் நோக்கில் கர்நாடக அரசு இதுபோன்ற இடைக்கால மனுக்களை திட்டமிட்டு தாக்கல் செய்வதாக மனுவில் தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவுடன் மத்திய அரசு பேசி சுமூகத் தீர்வு காணும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர் தற்போது தர இயலாது என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை உசச்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காவிரி பிரச்சினை குறித்து,  சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவு இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளது.
தமிழக, கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article