நியூஸ்பாண்ட்:
நேற்று, “காலா” பட விழாவில் பேசிய ரஜினி, “அரசியல் பேச நேரம் இன்னும் இருக்கிறது” என்ற அர்த்தத்தில் பேசினாலும், அரசியல் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டு வருகிறார் என்பதே உண்மை.
இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ரஜினி. இதில் மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை கோவையில் நடத்த தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் மாநாட்டை கோவையில் நடத்த திட்டமிட்டிருப்பதற்கு காரணம் என்ன என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
கோவை வடக்கு பகுதி ரஜனி மன்ற பிரமுகர் ஒருவர், ““பொதுவாகவே கோவையை மையமாகக் கொண்ட கொங்கு மண்டலத்தில் ரஜினிக்கு கணிசமான ஆதரவு உண்டு. தமிழகத்தின் பிற பகுதிகளைவிட அதிக நாட்கள் ரஜினி படங்கள் இங்கு ஓடியிருக்கின்றன. ஆகவே கோவை பகுதியின் மீது ரஜினிக்கு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு” என்றார்.
கோவை மாநகர பகுதியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். அவர், “கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக நீண்டகாலமாக இருந்தவர் வேணுகோபால். தற்போது மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளராக இருக்கிறார். (மற்ற பொறுப்புகளுக்கு இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை.)
வேணுகோபால் அதிதீவிர ரஜினி ரசிகர். இவர் மீது ரஜினிக்கு தனிப்பாசம் உண்டு.
சமீபத்தில் வேணுகோபாலுக்கு கடும் உடல் நலபாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவரை தனது சென்னை போயஸ் இல்லத்துக்கு அழைத்தார் ரஜினி. தனது வீட்டில் வேணுகோபாலுக்கு பாசத்துடன் சாப்பாடு பறிமாறியவர், தனது வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறவும் கூறினார்.
ஆனால் வேணுகோபால் அதை மறுத்துவிட்டு, தனது சொந்த ஊரில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதாகக் கூறி திரும்பினார். ஆனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் வேணுகோபால் புது வீடு கட்டி, புதுமனைபுகுவிழா நடத்தினார். அப்போதுகூட அவரை போனில் அழைத்து ரஜினி வாழ்த்து தெரிவித்தார். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம்.
இன்னொரு முக்கிய விசயம். கோவை (தொண்டாமுத்தூர் தொகுதி)யின் எம்.எல்.ஏவும் தமிழக அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியின் அண்ணன் அன்பு, தீவிர ரஜினி ரசிகர். கோவை குனியமுத்தூர் பகுதியில் ஆரம்ப காலத்தில் ரஜினி மன்றத்தில் பொறுப்பில் இருந்தவர்.
தனது சகோதரர் வேலுமணி அ.தி.மு.க. அமைச்சராக இருந்தாலும், கட்சிக் கூட்டங்களில் தலைகாட்டாதவர் அன்பு.
கோவை மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபாலுடன் நெருங்கிப் பழகுபவர். வேணுகோபால் வீட்டு புதுமனை புகுவிழாவின் போதுகூட முன்னின்று பரபரப்பாக இயங்கியவர் அன்பு.
மிகவசதி படைத்த அன்பு, பிரபலமான தங்க மயில் ஜூவல்லரியின் அதிபர்.
கோவையில் மாநாட்டை நடத்தினால் தான் பக்கபலமாக இருப்பதாக அன்பு உறுதிகூறியுள்ளார்.
வசதியோடு, செல்வாக்கும் நிறைந்த அன்பு இருக்கையில் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது?” என்றார் நம்மிடம்.
கோவை புறநகர் பகுதி பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். அவர், “இன்னொரு முக்கிய காரணம்.., ஆறுமுகசாமி! ஆம்.. பிரபலமான “மணல் பிரமுகர்” ஆறுமுகசாமிதான்.
இவரும் பெரும் செல்வமும் செல்வாக்கும் கொண்டவர். தான் சார்ந்த ஒக்கலிக கவுடர் சமுதாயத்தின் தலைவர் போல வலம் வருபவர். இவரது பேச்சுக்கு ஒக்கலிக கவுடர் இனத்தில் மறு பேச்சு கிடையாது. இவர் தனது சாதிக் கூட்டங்களில் பேசும்போது, ரஜினியை ஆதரித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். இவர் ரஜினியை மூன்று முறை சந்தித்திருப்பதாகவும் தகவல் உண்டு.
கோவையில் மாநாட்டை நடத்த தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருக்கிறார் “மணல் பிரமுகர்” ஆறுமுகசாமி” என்று சொல்லி முடித்தார் அந்த பிரமுகர்.
ஆக… ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாடு கோவையல் நடத்தப்பட இருப்பதன் ரகசியம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பு, “மணல் பிரமுகர்” ஆறுமுகசாமி ஆகியோர்தான்!