புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் 3 முக்கிய மாநிலங்களில் தற்போது எதிர்ப்பலை வீசுவதால், நரேந்திர மோடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சேர்ந்து, மொத்தம் 249 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகின்றன. மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எணணிக்கையில் இது 45%.

கடந்த 2014 தேர்தலில், இந்த மாநிலங்களில் பாரதீய ஜனதா கூட்டணி வென்ற இடங்களின் எண்ணிக்கை 187 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையில் அதிமுக வென்ற 37 இடங்களும் அடக்கம். ஏனெனில், மோடியின் நட்புக் கட்சியாக அதிமுக விளங்கி வருவதால் இந்த எண்ணிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், உத்திரப்பிரதேசம், மராட்டியம் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி ஆளும் தமிழ்நாடு போன்ற மாநிங்களில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதால், இந்த மாநிலங்களில் முந்தைய தேர்தலைப் போல் அறுவடை செய்ய முடியாதாம்.

மேலும், ‍மேற்கு வங்கத்திலும் பெரிய பாதிப்பை பாரதீய ஜனதாவால் உண்டாக்கிவிட முடியாதாம். அங்கே மம்தா பானர்ஜிக்கே செல்வாக்காம். அதேசமயம், பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாருடன் அமைத்துள்ள கூட்டணியால் ஓரளவு வாய்ப்பிருந்தாலும், பெரியளவில் லாபம் இருக்காதாம்.

ஆக மொத்தமாக, பாரதீய ஜனதா கட்சிக்கு, மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களையும் சேர்த்து, கணிசமான அளவில் எண்ணிக்கை வீழ்ச்சி இருக்குமாம். கடந்தமுறை கிடைத்த இடங்களைவிட, மிகவும் குறைவான இடங்களே அக்கட்சிக்கு கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

– மதுரை மாயாண்டி