சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகஅரசு 1500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதற்கான முன்பதிவு நேரிலும், www.tnstc.com இணையதளத்திலும் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே ரயில்களில் இருக்கைகளி நிரம்பிய நிலையில், தற்போது, சென்னையில் இருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, பெங்களூர், கோவை, திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பஸ்கள் நிரம்பிவிட்ட நிலையில் பிற போக்குவரத்து கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன், அரசு பஸ்களில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து மட்டுமே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 900 அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பி விட்டதால் மதுரை, நாகர்கோவில், சேலம், கோவை, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 600 பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. அதிலும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் நாளை (11-ந்தேதிக்கு) மக்கள் முன்பதிவு செய்ய தீவிரமாக உள்ளனர்.
நாளை பயணம் செய்ய இதுவரையில் 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இதுவார இறுதியில் வழக்கமாக நடைபெறும் முன்பதிவு அளவாகும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய www.tnstc.com இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு பஸ்கள் நிரம்பினாலும் பொதுமக்கள் எந்நேரமும் பயணம் செய்ய ஏதுவாக முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட போதிலும் வெளியூர் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் அதிக அளவில் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.