சென்னை

ங்கக் கடலில் மிக்ஜம் புயல் உருவானதால் சென்னையில் காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

 தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

மிக்ஜம் புயல் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்றும் நாளையும் புயல் காரணமாகத் தமிழகத்தில் அனேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்தப் புயல் எதிரொலியாகச் சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.