சென்னை: மாண்டஸ் புயலால் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அலை எழுச்சியின் காரணமாக கிராமங்களில் குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. நெம்மேலிக்குப்பத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது சென்னை தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வந்துகொண்டி ருக்கிறது. இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது.

இந்த புயல் காரணமாக, கடலில் 2 மீட்டர் முதல் 10 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்து பயமுறுத்தி வருகின்றன. காற்றின் வேகமும் இன்று பிற்பகல் முதல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களில் கடல் அலைகள் உயரே எழுந்து ஆர்ப்பரிக்கின்றன.

சென்னை எண்ணூர் அருகே கடல் சீற்றத்தால்,கடல் அலை அருகே உள்ள வீடுகுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடல் அலை எழுச்சியின் காரணமாக சீர்காழி அருகே தொடுவாய்,, மடவாமேடு, பூம்புகார் ஆகிய மீனவ கிராமங்களில் தாழ்வான பகுதி வழியே கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடல் நீர் புகுந்த கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களுக்கும் நிவாரண முகாம்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளனர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடல் அலைகள் மேலெழுப்பி கிராமத்திற்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் பரவலாக மழையும் பெய்ய துவங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல மாண்டஸ் புயல் – மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த கடல் சீற்றத்தால் நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. கடல் அரிப்பால் கோயில் முழுவதுமாக அடித்து செல்லும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த மீனவர் கிராமமான பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடல் அரிப்பு ஏற்பட்டு, ஐந்து வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், தொடர்ந்து வீடுகள் விழுந்து வருகிறது. இது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத.