சென்னை: சென்னை வெள்ளத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டுக்கு  மொத்தம் ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

அதன்படி, மத்திய அரசு,   பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடி, ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561 கோடி என மொத்தம்  ரூ. 1,011 கோடி  ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். (தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் (என்.டி.எம்.எஃப்) கீழ், ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு’ 561.29 கோடி)

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புயல் பாதிப்புகளை பார்வையிட் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சப் ராஜ்நாத் சிங் சென்னைக்கு இன்று வருகை புரிந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

பின்னர் தலைமை செயலகம் வந்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இதையடுத்து தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சரிடம் புயல் வெள்ள பாதிப்பு குறித்து மனு அளித்தார்.

பின்னர் அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டி அளித்தனர். முதலமைச்சர் பேசியதைத் தொடர்ந்து,   மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மிக்ஜாம் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீள்வதற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து,  தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு இங்கு வருகை புரியும்” என்றவர், தற்போது  வெள்ள  மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையும் ஈடுபட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு வெள்ளப் பாதிப்பு காரணமாக,  பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடியும் , நகர்புற வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ. 561 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.