டில்லி

ய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்குகிறது.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  தற்போது 18 வயதைத் தாண்டியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்துள்ளது.  அதன்படி 18 வயதைத் தாண்டியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் எனவும் இதில் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  எனவே மூன்றாம் அலைக்கு முன்பே 18 வயது நிரம்பாத குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு12-18 வயதான குழந்தைகளுக்குத் தடுப்பூசி அளிக்கும் சோதனைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருந்து கட்டுப்பாடாளர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் இணைந்து குழந்தைகளை இன்று முதல் தேர்வு செய்கின்றனர்.