சென்னை: பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் இதுவரை திறக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடங்களை போதித்து வருகின்றன. இதற்கிடையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மாநில அமைச்சரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று ‘பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில், பள்ளிகள் திறப்பது, மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்ட விபரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.