திருச்சி

மிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.  சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன.  தமிழக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டிருந்தது,  நால் இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

தமிழகத்தில் தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப் படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.   ஏற்கனவே தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஜூலை மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.  மேலும் முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாகப் பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன.

திருச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.