சென்னை: 
மிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிச.27-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்த முதல்வர், 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை பள்ளிகள் செயல்படத் தடை விதித்தார்.
இதனால் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வழியிலான மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் நாளை முதல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  இதனிடையே, தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 33 லட்சம் பேருக்கு நாளை முதல் பள்ளிகளில் நேரடியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கு அனைத்து பள்ளி நிர்வாகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.