சென்னை: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், செப்டம்பர் 1-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் புதுச்சேரியில் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா 2வது அலை கட்டுக்குள் இருப்பதால், பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம்  மற்றும்  பள்ளிக் கல்வித்துறைச் செயலர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது அதன்  தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதனப்டி,  செப்டம்பர் 1-ம் தேதி முதல் முதல்கட்டமாக 9, 10,11, 12-ம் வகுப்புகளும், அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும்.

9,10-ம் வகுப்புகள் ஒரு நாளும், அடுத்த நாள் 11, 12-ம் வகுப்புகளும் என சுழற்றி முறையில் பள்ளிகள் நடைபெறும், அதுபோலவே  கல்லூரிகளும் சுழற்சி முறையில் நடக்கும் என்றவர், இதுதொடர்பான விரிவான அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவிக்கும் என்றார்.

மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத மாணாக்கர்களுட்ககு கல்லூரி வளாகத்தில்  தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கனவே,  அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு, பெரும்பாலானோர் போட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரிகளில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும்  அரசு முன்னெடுத்து வருவதாக கூறியவர்,  கொரோனா தொற்று பரவல் தடுப்பு  வழிமுறைகளை அனைவரும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  பள்ளிகள் திறக்கும் விஷயங்களில், தமிழகத்தைப் பின்பற்றியே புதுச்சேரியும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.