ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சரை வரவேற்க, பல கிலோமீட்டர் தூரத்துக்கு பள்ளி மாணவர்களை நிற்க வைத்த சம்பவம், விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக, அரசியல் தலைவர்கள், முதலமைச்சர்கள் ஆகியோரின் வருகையின் போது ஏற்பாடுகள், வரவேற்புகள் தடபுடலாக இருக்கும். தொண்டர்கள், பொதுமக்களின் உற்சாக வரவேற்புகளுக்கு இடையே அவர்கள் வலம் வருவர்.

சில நேரங்களில், இந்த நடவடிக்கைகள் பேசப்பட்டாலும், பல தருணங்களில் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது.

அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரகுபர்தாஸ் கிரித் பகுதியில் உள்ள நிகழ்ச்சிக்கு வருவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் நிகழ்ச்சிக்கு காலை 10 மணிக்கு வருவதாக தான் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவரை வரவேற்கும் விதமாக, பள்ளி மாணவர்கள் பலர் நீண்ட வரிசையில் சாலையின் இரு மருங்கிலும் வரவேற்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளில் பாஜக கொடி, தலையில் பாஜக தொப்பி என முழுக்க, முழுக்க பாஜகவினராகவே காட்சியளித்தனர்.

ஆனால் 10 மணிக்கு முதலமைச்சர் வருவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மிகவும் தாமதமாக 12.10 மணியளவில் என்று நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அது ஒருபுறம் இருக்க, பள்ளி குழந்தைகளை சாலையில் காக்க வைத்தது,பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் சுன்னு காண்ட் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் ஆளும் பாஜகவின் முதலமைச்சரான ரகுபர் தாசால் பள்ளி மாணவர்களுக்கு எந்த நல்ல பலனும் கிடைக்கவில்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசு மீறிவிட்டது. மாநிலத்தின் கலாச்சாரமும் கெட்டுவிட்டது என்றார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மாவட்ட தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது: ஜன் ஆசிர்வாத் யாத்ரா என்ற இந்த நிகழ்ச்சி பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி.

அதற்காக மாணவர்களை அழைத்து வந்து, கருவியாக பயன்படுத்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. குழந்தைகளுக்கு எதிரானது. அவர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி எங்கள் கட்சி வலியுறுத்தும். இல்லை என்றால், நாங்கள் போராட்டத்தில் இறங்க தயாராக இருப்போம் என்றார்