கோவை: தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி, கோவையில் நேற்று ( மார்ச் 18ந்தேதி) பிரதமர்  மோடியின் பிரச்சார பேரணியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக  நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,.

தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது உட்பட எந்த வடிவத்திலும் குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் போது கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் ஆணைய உத்தரவை மீறி,  கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடி பிரச்சார பேரணியில் அரசு பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது- மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி. விசாரணைக்குப்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறியுள்ளார்.

கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மேலதாளங்கள் முழங்க மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திரண்டிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமடைந்த பிரதமர் மோடி தன் இரு கைகளை தூக்கி மக்களிடம் காட்டி அசைத்தவாறும், வணக்கம் வைத்தவாறும் சென்றார். செல்லும் வழியில், நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைகளின் மீது இருந்தவாறு கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகைள நடத்தினர். அவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டவாறு சென்றார்.

இந்த நிலையில், சாலை இருபுறமும் கூடியிருந்த மக்களிடையே மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு இடத்தில் பல மாணவர்கள் ஒரே ஆடையில் அனுமன் போல வேடமணிந்து வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து கூறிய மாவட்ட தேர்தல் ஆணையரும், ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி, இந்த விவகாரம் குறித்த விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்ற  பள்ளிக்கு  பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ்  அனுப்பப்பட்டு உள்ளது.  கோவை ஸ்ரீ சாய்பாபா வித்யாலயா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நோட்டீஸ்  அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை அழைத்து சென்றது குறித்து விளக்கம் அளிக்க  வேண்டும்,  இதற்கு அனுமதித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.