திருச்சி: தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் முதல் 8ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு குறித்து 30ந்தேதி முடிவு தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழகத்தில்  செப்டம்பர் 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு ஆரம்ப நாட்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது 70 சதவிகிதம் வரை மாணவர்கள் வகுப்புக்கு வந்து படித்துச்செல்கின்றனர். இதையடுத்து  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.அதையடுத்து, அது தொடர்பான அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும் என அமைச்சர்தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஊரடங்கு 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,  அது தொடர்பாக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளி திறப்பது குறித்து முடிவுவெடுக்கப்படும் என கூறினார்.