பெங்களூரு: குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வயது வரம்பு கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு ஆலோசிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு தடை விதிப்பது மற்றும் அதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்க தேவயைன சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி ஒருபுறம் பொருளாதார முன்னேற்றத்தை கொடுத்தாலும், மற்றொரு புறம், இளந்தலைமுறையினர், இணையதளங்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்துவிடும் நிலையும் உருவாகி வருகிறது. நாடு முழுவதும் பிறந்த குழந்தைகளை தூங்க வைக்கவும், உணவு ஊட்டவும் இணையதளங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகங்கள் பயன்பாடு குழந்தைகளிடத்தில் அதிகரித்துவிட்டது. இதனால், இணையதளங்கள் மூலம் இளம் தலைமுறையினரை திசை மாற்றும் நடவடிக்கையிலும் சில கும்பல்கள் ஈடுபட்டு, அதன்மூலம் பணம் சம்பாதித்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் திசைமாறிச் சென்று ஆபத்தான விஷயங்களில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.
இதன் காரணமாக, இணையதளங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த குறைந்த பட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மனோதத்துவ மருத்துவ நிபுணர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டிவிட்டர் இணையதளம் தற்போது எக்ஸ் என பெயர்மாற்றப்பட்டிருக்கும் நிலையில் பல பயனரது கணக்குகளை தங்களுக்கு தெரியாமல் எக்ஸ் நிறுவனம் முடக்கியது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி. நரேந்தர் மற்றும் நீதிபதி விஜயகுமார் ஏ. பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சமூக வலைதளங்கள் குறித்து தங்களது கவலையை பகிர்ந்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை கையாளும் போது நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளது.
சமூக வலைதளங்களால், குழந்தைகளின் எதிர்காலம் சீரழிகிறது என குற்றம் சாட்டியதுடன், மது அருந்துவதற்கு நாடு முழுவதும் இருக்கும் வயது வரம்பு சட்டத்தைப்போலவே சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
மேலும் இதுகுறித்து பேசிய நீதிபதி நரேந்தர், இன்று பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டனர் அதனால், ” குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வதே சிறந்தது என சொல்வேன்… . குறைந்தபட்சம் நீங்கள் பயனர் வயது வரம்பை கொண்டு வர வேண்டும். 17-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேசத்தின் நலன் எது, எது இல்லை என்பதை தீர்மானிக்க என்ன முதிர்ச்சி உள்ளதா என கேள்வி எழுப்பியதுடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவருக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் . சில ஆன்லைன் கேம்களை அணுகுவதற்கு பயனர் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதை ஏற்ற நீதிபதி, அதுபோன்ற சட்டத்தின்படி, சமூக ஊடகங்களை அணுகுவதற்கு ஏன் அதே நடவடிக்கைகளை நீட்டிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியதுடன், கலால் விதிகளைப் போல சமுக வலைதளங்களை பயன்படுத்தவும் வயது வரம்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியவர், சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்திலும் மனதை கெடுக்கும் விஷயங்களை அகற்ற வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொண்டுவருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.