நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளிகள் இல்லை என்றும், கொத்தடிமைகள் என்ற பெயரில் மோசடி நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் பெண் தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மறைந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் 2012 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

“கொத்தடிமைகள் யார் தெரியுமா? பணத்தை வாங்கிக்கொண்டு செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள் கொத்தடிமைகள் கிடையாது.

அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வருகிறார்கள். பணத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு பிறகு தங்கள் வேலையை உதறிவிட்டு செல்கிறார்கள்.

இது ஒரு மோசடி. இந்த தொழிலாளர்கள் கொத்தடிமை என்பதை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பெஞ்சில் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியாமல் போனதால் 2018 ம் ஆண்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

செங்கல் சூளையில் வேலைக்கு வந்த கணவனும் மனைவியும் 2012 ம் ஆண்டு ஜூன் மாதம் தங்கள் ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் வாங்கிய ₹ 3 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு செல்லுமாறு ஒப்பந்ததாரர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக முகாமில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கணவன் மட்டும் தப்பி சென்றுள்ளார். ஒப்பந்ததாரர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.