டில்லி

அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் ஒருங்கிணைப்பாளர் பிரதீக ஹஜேலாவை உச்சநீதிமன்றம் மத்தியப்பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது.

அசாம் – மேகாலயா மாநிலத்தில் இருந்து கடந்த 1995 ஆம் வருடம் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்றவர் பிரதீக் ஹஜேலா.   இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இவரை மத்திய அரசு தேசிய குடியுரிமைப் பட்டியல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.  இவர் இந்தப் பட்டியல் அமைப்பதை மேற்பார்வை இட்டு வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று இந்த பட்டியலில் இறுதி வடிவம் வெளியிடப்பட்டது.     அதில் சுமார் 19 லட்சம் பேர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதனால் அசாம்  மாநிலம் முழுவதும் முழுவதும் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது  அத்துடன் பிரதீக் வேண்டுமென்றே பல பேரைப் பட்டியலில் இருந்து நீக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் பிரதீக் உச்சநீதிமன்றத்திடம் தனது நிலையை விளக்கி மனு ஒன்றை அளித்துள்ளார்.   அதில் தன்னை இடமாற்றம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது    இதையொட்டி உச்சநீதிமன்றம் அவரை மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த இடமாற்றம் இன்னும் 7 நாட்களுக்குள் நடைபெற வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இடம் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் இதற்கு ஏதும் காரணம் உள்ளதா எனக் கேட்டதற்கு அவர் காரணம் இன்றி இடமாற்றம் நடக்குமா என பதில் கேள்வி கேட்டுள்ளார்.

தலைமை நீதிபதி மாற்றத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை.  எனினும்  ஹஜேலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வந்த தகவல்களால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.