டில்லி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் மூத்த வழக்குரைஞர் இ.சி.அகர்வலாவும், விசாலாட்சி சார்பில் வழக்குரைஞர் புல்கித் தாரேவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மனுவில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளனர். தவிர இந்த மனுவில் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இன்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆக தொடர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.