டில்லி

ண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்துவ மிஷனரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறியிருந்தார்.

இது குறித்து சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். அண்ணாமலை இரு மதத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலை பரப்புவதாகவும் இதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பியது.

சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தர வேண்டும் என்றும் அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போது பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தர். எனவே வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அண்ணாமலையின் பேச்சு குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்து இருந்தார். அண்ணாமலைக்கு எதிரான வழக்கைச் சேலம் கீழமை நீதிமன்றம் பரீசிலிக்கும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அண்ணாமலை மனு குறித்து பியூஸ் மனுஷ் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.