டில்லி:

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி, இன்று மறு வாக்குகள் உயர்நீதி மன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உள்ளது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69590 வாக்குகளும், அப்பாவு 69541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  சென்னை உயர்நீதி மன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.

அதனப்டி, 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள் சென்னை கொண்டு வரப்பட்ட உயர்நீதி மன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை 11.30 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரியும், மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரியும் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை சார்பில் உச்சநீதி மன்றத்தில் நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மறுவாக்கு எண்ணிக் கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட சென்னை உயர்நீதி மன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து  வழக்கை அக்டோபர் 23ந்தேதி  ஒத்தி வைத்துள்ளது.