கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன்

நாடு முழுவதும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறது உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு அதிரடி உத்தரவு.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும், மறுசீராய்வு மனு தாக்கல் வேண்டும் வற்புறுத்த, மத்திய அரசும் உச்சநீதி மன்றத்திடம் மறுபடியும் ஓடியிருக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு, கடந்த மாதம் உச்சநீதி மன்றம் போட்ட கிடுக்குப்பிடியே இதற்கெல்லாம் முக்கிய காரணம்.

அதாவது எஸ்சி. எஸ்டி பிரிவினரை சாதீய ரீதியாக கொடுமைப்படுத்து பவர்களை ஒடுக்க, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் 29 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட் ட இச்சட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் புகார் கொடுத்தால், புகாருக்கு உள்ளானவர் மீது எப்ஐஆர் போட்டு போலீசார் உடனே கைது செய்ய முடியும்.. முன் ஜாமீன், ஜாமீனெல்லாம் அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடமுடியாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை யாருமே குறை கூறவில்லை.. ஆனால் தனிப்பட்ட விரோதங்களில் பழி தீர்த்துக்கொள்ளவும், மிரட்டவும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் தொடருவதால்தான் சர்ச்சைகள் ஓயமாட்டேன் என்கிறது.

ஆனானப்பட்ட அரசியல்வாதிகளையே ஓடவிடும் அளவுக்கும் எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டம் ஆட்சியாளர்கள் கையில் அப்படியொரு ஆயுதமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாது உண்மை.

ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த புதிதில் அவருக்கும் அப்போதைய ஜனதா கட்சித்தலைவராக இருந்த டாக்டர் சுப்ரமணிய சுவாமிக்கும் இடையே அரசியலில் அப்படியொரு மோதல் இருந்துவந்தது.

எப்படியாவது சாமியை உள்ளே தள்ளிவிடவேண்டும் என்று ஜெயலலிதா துடியாய் துடித்தார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிட்டு பேசிய சுப்ரமண்ய சாமி, பிரபாகன் சர்வசேத அளவில் ஒதுக்கப்பட்ட International paraiah என்று சொல்லிவிட்டார்.

பறையா என்ற சொல் தாழ்த்தப்பட்டோரை அவமானப்படுத்திவிட்டதாக சுப்ரமணியம் சுவாமிக்கு எதிராக எஸ்சி எஸ்டி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடி கைதுக்கு தமிழக போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்.

சென்னை நீதிமன்றத்தில், ‘’கைதுசெய்ய ஒரு நாள் தடை’’ என்ற அவகாசத்தை பெற்றுக்கொண்டு போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவானார் சுப்ரமணிய சாமி, டெல்லி செல்லும் விமானத்தில் அவர் போகக்கூடும் என்று போலீசார் கொஞ்சம்  அந்த நேரத்திற்காக காத்திருந்த நேரத்தில், கிட்டத்தட்ட ஓடும் பஸ்ஸை துரத்திப்போய் புட்போர்ட் டிராவல் அடிப்பதுபோல, வேறு ஒரு பயணியின் டிக்கெட்டில் மும்பை பிளைட்டை பிடித்து அங்கிருந்து டெல்லிக்கு தப்பிப்போனார்.

இருந்தாலும் கைது வாரண்ட்டோடு டெல்லிக்கு போய், சுப்ரமணிய சாமியை கொத்திவர அன்றைய கூடுதல் டிஜிபி தேவாரமே சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். ஆனால் சுப்ரமணிய சாமி, அதற்குள் உச்சநீதிமன்றதில் தடையாணையை பெற்றுவிட்டதால், டெல்லிக்கே போகாமல் வெறுங்கையோடு திரும்பினார் ஏடிஜிபி தேவாரம்.

பறையா என்ற சொல் ஆக்ஸ்போர்ட் இங்கிலீஷ் அகராதியில், ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட போன்ற அர்த்தங்களை கொடுப்பதாக உள்ளதென்று சுப்ரமணிய சாமி வாதாடியதெல்லாம் தனிக்கதை.

இதுபோன்ற சம்பவங்களால்தான் எஸ்.சி. எஸ்டி சட்டம் பிளாக் மெயிலுக்கே அதிகம் பயன்படுகிறது என்று அடிக்கடி வெடிக்கிறது.

அந்த காலகட்டத்தில் ஒரு சாமான்யனின் புகார், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் புகார் என்றால் காவல் நிலையங்களில் எந்த அளவுக்கு எடுபடும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. புகார் கொடுக்கப் போனவரையே போலீசார் படாத பாடு படுத்திவிடுவார்கள். அதனால்தான், எஸ்சிஎஸ்டிக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒரு முக்கியமான பிரிவை மத்திய அரசு சேர்த்தது.

அதாவது தாழ்த்தப்பட்டவர் தனக்கு எதிராக கொடுமை நடந்துள்ளது என்று புகார் அளித்து அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதே வழக்கு பதிவு செய்து தண்டிக்க முடியும் என்று கொண்டுவந்தார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் போன்றோர் மீதும்கூட எஸ்சிஎஸ்டி சட்டம் பிரிவு நான்கின்கீழ் வழக்கு பதிவு செய்ய வைக்கமுடியும்.

ஏற்கனவே தலித்துகள் தங்களை மிரட்ட இந்த சட்டத்தை பயங்கர ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்று மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு காட்டிவந்த நிலையில், அதிகார வர்க்கமும் பாதிக்கப்படுவதால் அவர்களும் இதில் சேர்ந்துகொண்டனர்.

இந்த எதிர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஒரு வழக்கைத்தான், உச்சநீதிமன்ற நீதிபதிகள் யூ.யூ.லலித் மற்றும் ஏகே கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் வந்தால் உடனே கைது செய்யவேண்டிய கட்டாயமில்லை. ஏழுநாட்களுக்குள் விசாரணையை போலீசார் முடிக்கவேண்டும். கைது நடவடிக்கை என்றால் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவரின் அனுமதியோடே செய்யவேண்டும்.

புகாருக்குள்ளானவர் முன் ஜாமீன் பெறலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால்,  அவரின் துறை சார்ந்த மேலிட நிர்வாகத்தின் அனுமதியின் பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.

இத்தகைய திருத்தங்களுக்குத்தான் அரசியல் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. உண்மையில் சொல்லப்போனால் இது மிகவும் சிக்கலான பிரச்சினை.

எஸ்சிஎஸ்டி வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத வழக்குகளே அதிகம் என்று சுட்டிக்காட்டுகிறது ஒரு தரப்பு.. தேசிய அளவில் அனைத்து குற்ற வழக்குகளிலும் நீதிமன்றங்கள் தண்டனை தரும் விகிதாச்சாரம் 42.5 சதவீதம் என்றிருக்கையில் எஸ்சிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவோர் விகிதாச்சாரம் வெறும் 27 சதவீதம் மட்டுமே.. 2007 முதல் 2016 வரையிலான பத்தாண்டு புள்ளிவிவரம் இது.

ஆனால் இங்கே நினைவில் மேற்கொள்ளப்படவேண்டிய மிக முக்கியமான விஷயம், பாலியல் பலாத்கார வழக்கு களில் தண்டனை பெறுவோரின் விகிதாச்சாரம், எஸ்சிஎஸ்டி வழக்குகளின் 27 சதவீதத்தைவிட குறைவு.. வெறும் 25 சதவீதம்தான். அதிலும் தமிழ்நாட்டில் பலாத்கார வழக்கு தண்டனை சதவீதம் 2015ல் 25.1 ஆக இருந்தது 2016ல் 19%-ஆக அடியோடு சரிந்துள்ளது.

இருப்பினும் பாலியல் வழக்குகளில் மட்டும் சட்டத்தின்பிடி நாளுக்கு நாள் இறுகிக்கொண்டே போகிறது. ஆனால் எஸ்சிஎஸ்டி வழக்குகளுக்கு மட்டும் நீர்த்துப்போகச்செய்யும் நடவடிக்கைகள் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. எஸ்சிஎஸ்டி சட்டத்தையும் அதனை அமல்படுத்தும் தளங்களிலும் ஆராய்ந்தால் இதற்கான விடைகள் தெரியவரும்.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்ய அந்தக்காலத்தில் செல்வாக்கு பெற்ற மற்ற சமூகத்தினருக்கு அஞ்சி போலீசார் பெரும் தயக்கம் காட்டுவார்கள். இன்று நிலைமையே மாறிவிட்டது. மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தாக்கத்தால், கொடுமை நடந்தால் உடனே அம்பலத்துக்கு கொண்டு வரப்பட்டு வழக்காக ஏறிவிடுகிறது..

ஆனால் பிரச்சினை முளைக்கிற இடங்கள் வேறு தளங்கள்.. கடுமையான குற்றங்கள் தொடர்பாக கொடுக்கப்படும் புகார்கள் பெரும்பாலும் வாபஸ் வாங்கப்படுவதில்லை. ஆனால் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தொடர்பான உண்மையான புகார்கள் ஆரம்பித்த வேகத்தில் கடைசிவரை போகுமா என்றால் இல்லை என்றே தெரியவரும்.. புகார்கள் பெரும்பாலும் தள்ளாட்டமே காணும்.

புகார் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் பெற்றுத் தருவதைவிட அவரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டு சமரசம் என்ற பெயரில் காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளும், கட்டை பஞ்சாயத்து கோஷ்டிகளும் புகாருக்குள்ளான தரப்பிடம் பேரம் பேசி பணமாக்கிக்கொள்ளும்.

மிரட்டலுக்காகவே தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படும் புகார் என்றால் புகாருக்குள்ளானவரின் செல்வச்செழிப்பை கருத்தில் கொண்டு பேரம் இன்னும் அதிக அளவில் இருக்கும்.

‘’என்ன கொடூரமான புத்தி இருந்தால், சாதி ரீதியாக கேவலப்படுத்தி திட்டுவாய்.. ஜெயிலில் இருந்து விட்டு வந்தால் உனக்கெல்லாம் புத்தி வரும்’’ என பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இடைத்தரகர் கும்பல் சத்தியத்தின் மறுபிறப்பாய் ஆரம்பித்தில் சீறும். புகாருக்குள்ளானவர் சரிக்கட்டி பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொள்கிறார் என்று தெரிந்துவிட்டால் உடனே  தொணி மாறிவிடும்.

‘’ நடந்தது நடந்துபோச்சி. கேசு போட்டு உள்ளே போட்டுட்டா வெறுங்கையை வீசிக்கிட்டு போவதைத்தவிர நீ என்னத்தை காணப்போகிறாய்? அதனால புத்திசாலித்தனமா கிடைக்கிற ஆதாயத்தை வாங்கிட்டு மேற்கொண்டு பொழைக்கிற வழியை பாரு’’ என்று சாந்த சொரூப அறிவுரையாளர்களாக மாறிவிடுவார்கள். இந்த கட்டத்தில் அப்பாவிகளின் நிலைமை, அவரவர் மன வலிமையை பொறுத்தது..

வெளிப்படையாக சொன்னால், எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழான உண்மைப்புகார்கள் அத்தனையும் தக்க ஆதாரங்களோடு வழக்காக பதிவானால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பவே முடியாது.. வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளிகளின் விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும்..

ஆனால் உண்மைப் புகார்களை விட, மிரட்டல் மற்றும் பொய்ப்புகார்களே, அதிகமான அளவில் வழக்குகளாக பதிவாகும் போக்கு  நிலவுகிறது.. இத்தகைய வழக்குகளில் நீதிமன்றங்கள் ஆதாரங்களை கேட்கும்போது வழக்கு முற்றிலுமாக சிதைந்துபோகிறது.. குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் சுபலத்தில் விடுதலை ஆகிவிடுகிறார்கள்.

எஸ்சிஎஸ்டி சட்டத்தை பொறுத்தவரை,  அதனை அமல்படுத்தும் கட்டத்தில் சமூக சிந்தனையோடு நேர்மையாய் பாரபட்சமின்றி செயல்படும் மனப்போக்கு அதிகாரிகளுக்கு வேண்டும். அப்போதுதான் உண்மையான புகார்கள் அனைத்தும் எந்த தடையும் இன்றி சட்டத்திடம் நீதி கேட்டு ஓடிவரும்.

எஸ்சிஎஸ்டி புகார் என்று வந்தாலே பண அரிப்பு ஏற்பட்டு பல்வேறு தரப்பிலிருந்து நுழையும் இடைத்தரகர்களை வழக்கின் பக்கம் வரவிடாமல் விரட்டியடித்தாலே போதும். சாதீய கொடுமைக்கு ஆளான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தங்கு தடையின்றி நீதி கிடைக்கும்.