சென்னை
தமிழக குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் 9370 பேர் பாதிக்கப்பட்டு அதில் 70 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 24 மணி நேரத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியாத நிலையில் தற்போது சிறப்பு வார்டு அமைத்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையைத் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னை எழும்பூரில் கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழக குடிசை மாற்று வாரியம் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் கட்டி குறைந்த வாடகையில் அளிக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் பழுதடைந்து வசிக்க லாயக்கில்லாமல் போனதால் கடந்த 2018 ஆம் அண்டு இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த குடியிருப்புகளை ஏற்கனவே வசித்தவர்களுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு இந்த குடியிருப்புக்களை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி அமைக்க அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆஷா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அமர்வு, இந்த குடியிருப்புக்களை பயனாளிகளுக்கு வழங்கி ஏற்கனவே வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கூடாது என அரசுக்கு வலியுறுத்தியது. மேலும் குடியிருப்புக்களுக்கு நடுவில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கக் கூடாது என்னும் உலக சுகாதார மையம் உத்தரவை மீறி இங்கு வார்டு அமைப்பது குறித்து விளக்கம் கோரி அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.