டில்லி

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை இன்று  உச்சநீதிமன்றம், ரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டு யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா பங்கு  பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து வினோத் துவா கடும் விமர்சனங்களை வைத்தார்.   இது அப்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த நிகழ்வில் அவர் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தது குறித்து இமாசலப் பிரதேச பாஜக பிரமுகர் அஜய் சியாம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் ”பிரதமர் மோடி பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத மரணங்களை வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்துவதாக வினோத் துவா அவதூறாக பேசி உள்ளார்.  எனவே அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.  புகாரின் அடிப்படையில் இமாசலப் பிரதேச காவல்துறையினர் தேசத் துரோக வழக்குப் பதிந்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வினோத் துவா உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.  இந்த மனுவின் அடிப்படையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை செய்தது.   இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு யு லலித், வினீத் சரண் ஆகியோரின் அமர்வு வழக்கை விசாரித்தது.  சென்ற அக்டோபர் மாதம்  இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது.

கடந்த 1962 ஆம் ஆண்டு நடந்த கேதார்நாத் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில் நாட்டுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விமர்சனங்கள், மற்றும் வன்முறைக்கு ஆதரவளிக்கும் கருத்துக்கள் மட்டுமே தேச துரோக சட்டத்தின் கீழ் வரும்.   அவ்வாறு இல்லாத எதுவும் தேச விரோத சட்டத்தின் கீழ் வராது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  தீர்ப்பில், “அரசுகள் மீதான விமர்சனங்கள் தேச வினோத குற்றம் ஆகாது.  ஏற்கனவே கேதார்நாத் சிங் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைத்து  பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும்.   எனவே வினோத் துவா மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது.” எனக் கூறி வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.