டில்லி

திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கு நடந்தது.  அதில் திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் தனது உரையில் எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினர் நீதிபதிகளானது குறித்து தவறாகப் பேசியதாகப் புகார்கள் எழுந்தன.   எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.   அந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு தெரிவித்தது.  எனவே ஆர் எஸ் பாரதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்தார்.   நேற்று இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஆர் எஸ் பாரதி எவ்வித உள்நோக்கத்துடன் எதையும் பேசவில்லை.  மேலும் அதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை.  ஆகவே அவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்கிறோம்.   எனவே இவற்றை நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவு இட்டுள்ளனர்.