சென்னை

பாஜக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆரணி பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார்

கிஷன் ரெட்டி

பாஜகவின் மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராகப் பதவியில் இருந்த  கிஷன் ரெட்டி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.   அப்போது அவரது உதவியாளர் நரோத்தமன் என்பவர் ஆரணி பாஜக நகரத் தலைவர் புவனேஷ்வர் குமார் என்பவரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து புவனேஷ்வர் குமார், “மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டி தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தமிழக பா.ஜ. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தேர்தல் நெருக்கத்தில் சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். அப்போது வடசென்னை அ.தி.மு.க. துணைச செயலர் விஜயராமன் எனக்கு அறிமுகமானார்.

அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் வாயிலாக அமைச்சரைச் சந்திக்க வைத்தார்; மத்திய அரசின் வாரியம் ஒன்றில் உறுப்பினர் பதவி வாங்கி கொடுப்பதாக நரோத்தமன் ஆசை வார்த்தை கூறியதால் கேட்ட பணத்தைக் கொடுக்க தயாரானேன். மேலும்‛தேர்தலில் போட்டியிட அமைச்சர் வாய்ப்பு வழங்குவதாகக் கூறுகிறார்’ என நரோத்தமன் கூறினார். வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக் கொண்டேன். ஆரணி தொகுதியில் போட்டியிட விரும்பி சுய விபரக்குறிப்பு கொடுத்தேன்.இதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டனர்;

நான் முதலில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்றதும் உடனே பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறினர். அங்கே ஒரு தனி அறையில் தங்க வைத்தனர்; பின் பணத்தைக் கேட்டனர். நான் மறுத்ததால் ‘சீட்’ அறிவிக்கப்பட்டதும் கொடுத்தால் போதும் என்றனர்.. முதல் கட்டமாக பா.ஜ.வுக்கான தொகுதிகளை அ.தி.மு.க. அறிவித்த பட்டியலில் ஆரணி இல்லை; ஆனால் திருவண்ணாமலை உள்ளதால் அங்குப் போட்டியிடுங்கள் என வற்புறுத்தினர்; மறுத்து விட்டேன்.

ஆகவே திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ. துணைத் தலைவரான என் சகோதரி வசந்திக்கு அங்கு போட்டியிட சீட் வாங்கி தருகிறோம் என ‘ரூட்’டை மாற்றி அவர்கள் 50 லட்சம் ரூபாயை வாங்கி விட்டனர். பா.ஜ. வேட்பாளர் பட்டியலில் திருவண்ணாமலைக்குத் தணிகை வேலு வேட்பாளராகி விட்டார். ஆயினும் வசந்தியை வேட்பு மனுத் தாக்கல் செய்யும்படி கூறினர்; அதன்படி செய்தோம். தணிகை வேலு வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் வாபஸ் வாங்கி விட்டோம். விஜயராமன், நரோத்தமனிடம் பணத்தைத் திருப்பி கேட்டோம்; காலம் கடத்தினர்.

இதையடுத்து தி.நகரில் தேர்தல் வேலையில் இருந்த கிஷன் ரெட்டியைச் சந்தித்து நடந்ததைக் கூறினோம். அவர் நரோத்தமனின் தந்தை சிட்டிபாபுவை அழைத்து ‘பணத்தை செட்டில் செய்து விடுங்கள்’ என்றார்;  அவர்கள் தரவில்லை. எனவே மீண்டும் கிஷன் ரெட்டியைச் சந்தித்து முறையிட்டோம். அவர் போலீசில் புகார் செய்யும்படி சொன்னதால் புகார் செய்தோம்.

கொரோனா காலத்தால் புகார் பதியப்படாமல் இழுத்துக் கொண்டே போனதால் 15 நாட்களுக்கு முன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தி.நகர் காவல்துறை துணை ஆணையரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாண்டி பஜார் காவல்துறை நிலையத்துக்குப் புகாரை அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். கிஷன் ரெட்டி கேபினட் அமைச்சராகி தன் உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத்தமனை நீக்கி விட்டார்.

இந்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனுத் தாக்கல் செய்தனர். மனு தள்ளுபடியானதால் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். ஆயினும் முதற்கட்டமாக ஓட்டலில் இருக்கும் ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்து பதிவுகளைப் பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.