டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்குங்கள் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் குறைந்த எண்ணிக்கையிலான தரவுகளை தெரிவித்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.50ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி,தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்ப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்த தகவலின்படி, கடந்த ஏப்ரல் 1, 2020 முதல் ஜனவரி 11,2022 வரையிலான தகவலின்படி இந்தியாவில் ‘1,36,910 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்; 10,094 குழந்தைகள் ஆதரவற்றுள்ளனர்; 488 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர். இப்படியாக மொத்தமுள்ள 1,47,492 குழந்தைகளில் 76,508 ஆண் குழந்தைகளும், 70,980 பெண் குழந்தைகளும், 4 பிற பாலினத்தை சேர்ந்த குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களில் அதிகபட்ச குழந்தைகள் (துல்லியமாக 1,25,205 பேர்), ஒரு பெற்றோரை இழந்து – மற்றொரு பெற்றோரின் ஆதரவின் கீழ் வாழ்கின்றனர். இன்னும் 11,272 குழந்தைகள் பெற்றோரின்றி குடும்ப உறுப்பினர்கள் யாருடனாவது வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 8,450 குழந்தைகள் பாதுகாவலரின் கண்காணிப்பின் கீழ் வாழ்கின்றனர். பெற்றோரை இழந்திருக்கும் இந்தக் குழந்தைகள் பட்டியலில் 8 முதல் 13 வயதுடைய குழந்தைகள் 59,010 பேர்; 14 முதல் 15 வயதுடைய குழந்தைகள் 22,763 பேர்; 16 முதல் 18 வயதுடைய குழந்தைகள் 22,626 பேர்; 26,080 பேர் 4 முதல் 7 வயதுடையவர்களாக உள்ளனர்.
மாநில வாரியாக பார்க்கையில், ஒடிசாவில் 24,405 குழந்தைகள்; மகாராஷ்ட்ராவில் 19,623 குழந்தைகள்; குஜராத்தில் 14,770 குழந்தைகள்; தமிழ்நாட்டில் 11,014 குழந்தைகள்; உத்தர பிரதேசத்தில் 9,247 குழந்தைகள், ஆந்திராவில் 8,760 குழந்தைகள்; மத்திய பிரதேசத்தில் 7,340 குழந்தைகள்; மேற்கு வங்கத்தில் 6,835 குழந்தைகள்; டெல்லியில் 6,629 குழந்தைகள்; ராஜஸ்தானில் 6,827 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய ரூ.50,000 இழப்பீட்டை, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களுக்கே வழங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கொரோனா உயிரிழப்பு குறித்து சரியாக ஆய்வு செய்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, கொரோனா பரவத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சிறாா்கள் அனாதைகளாகி உள்ளனர். இவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் பெற்றோரில் ஒருவா் அல்லது இருவரையும் இழந்துள்ள குழந்தைகள், தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விண்ணப்பிப்பது கூட அவர்களுக்கு கடினம். இதனால் கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறாா்கள், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறாா்கள் ஆகியோரை அணுகி மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.