சென்னை: குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினா கடற்கரை சாலையில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டின் 72வது குடியரசு தினம் வரும் 26ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை கடற்கரை சாலையிலும், குடியரசு தின அணிவகுப்பு நடை பெறும். இதையொட்டி,  ஒத்திகை நடைபெறும் 3 நாட்கள் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால்  சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனவரி 20, 22, 24 ஆம் தேதி மற்றும் மற்றும் 26ந்தேதி ஆகிய 4 நாட்களும் காமராஜர் சாலையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்த நாட்களில் காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

இதன் காரணமாக அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.