டில்லி:
‘‘குழந்தைகள் ஆபாச வீடியோ மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் இன்டர்நெட்டில் வெளியிடுபவர்கள் குறித்து புகார் அளிக்க பிரத்யே வெப்சைட் மற்றும் ஹாட்லைன் நம்பரை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் வாட்ஸ் அப் மூலம் பாலியல் பலாத்கார வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்¬ எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து சிபிஐ விசாரித்து அத்தகைய சமூக விரோதிகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது, இன்டர்நெட்டில் குழந்தைகள் ஆபாச வீடியோ மற்றும் பாலியல் பலாத்கார வீடியோ வெளியிடுவதை தடுக்க முடியவில்லை என்று இணையதள நிறுவனங்களும், மத்திய அரசும் தெரிவித்தது.
இதை தொடர்ந்து இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய எலக்ட்ரானிக்ஸ மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் 11 ஆலோசனைகளை குழு பரிந்துரை செய்திருந்தது.
அதில், ‘‘இத்தகைய வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர் குறித்த தகவலை யார் வேண்டுமானாலும் புகாராக பதிவு செய்யும் வகையில் பிரத்யே வெப்சைட் ஏற்படுத்த வேண்டும். ஹாட்லைன் நம்பர் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக புகார் அளிக்கவும், விசாரணை நடத்தும் அமைப்பாக சிபிஐ.யை நியமனம் செய்ய வேண்டும். மத்திய அரசின் தொழில்நுட்ப குழு இவற்றை கண்காணிக்க வேண்டும். புகார் மீதான நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தையும் தெரியபடுத்த வேண்டும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘‘கூகுல், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்களது தேடுதல் களத்தில் கூடுதலாக இதர இந்திய மொழிகளையும் சேர்ப்பதோடு, தேடுதலுக்கான வார்த்தைகளையும் நீட்டித்து அவற்றை பிளாக் செய்ய வேண்டும். இது தொடர்பாக உடனடியாக சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தை மத்திய குழுவோ அல்லது விசாரணை அமைப்போ தொடர்பு கொண்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். சிபிஐ இந்த விசாரணையை மேற்கொள்ள தயாராக இருந்தால் அவர்களிடமே ஒப்படைத்துவிடலாம்’’ என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளை நீதிபதிகள் மதன் பி லோகுர், லலித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக் கொண்டு, இதை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட நிலை குறித்து டிசம்பர் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் நீதிமன்றம் இதர பரிந்துரைகளை தெரிவிக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.