கொல்கத்தா:

தேசிய அளவில் ஜிஎஸ்டி.க்கு எதிரான இயக்கத்தை வழிநடத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். ஜிஎஸ்டி.யால் அதிகளவில் பாதித்துள்ள சிறு மற்றும் குறு வர்த்தகர்களை கொண்டு இந்த இயக்கத்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு தனது கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் சங்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிறு அளவில் கட்சி வளர்ச்சியடைந்துள்ள பகுதிகளிலும் இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி.யால் சிறு வர்த்தகர்கள் மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலானது முதல் பல்வேறு பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கென்று பிரத்யேக ஃசாப்ட்வேர் வாங்குவது கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. இதை இயக்க தனியாக ஒரு நபர் வேலைக்கு சேர்க்க வேண்டியுள்ளது.

அதோடு பலதரப்பட்ட ஜிஎஸ்டி விதிப்புகள் உள்ளது. இதனால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பதை அறிய முடியாமல் வர்த்தகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த பிரச்னைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல மம்தா முடிவு செய்துள்ளார். பணமதிப்பிழப்பு தொடர்பான பேரணிகள் உள்ளிட்ட பல வடிவிலான போராட்டங்களை முன்னெடுத்தி நடத்த மம்தா திட்டமிட்டுள்ளார்’’ என்றார்.

இந்த போராட்ட இயக்கத்தை முதன்முதலாக மோடியின் மாநிலமான குஜராத்தில் இருந்து தொடங்கி தேசிய அளவில் ஈர்ப்பை திரட்ட மம்தா திட்டமிட்டுள்ளார். ஒரு கூட்டத்தில் மம்தா பேசுகையில், ‘‘ நாங்கள் ஜிஎஸ்டி.க்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால், பல்வேறு குறைபாடுகள் உள்ள நிலையில் இதை ஏன் அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டும். இது குறித்து நாங்கள் பல முறை எச்சரித்துள்ளோம். பல விதமான வரி விதிப்பு முறைகள் இதில் உள்ளது.

50 சதவீத வர்த்தகர்கள் ஜிஎஸ்டி முறையில் தங்களை இணைத்துக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அதில் பல பிரச்னைகள் உள்ளது. மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்திலும், அனைத்து தெருக்களிலும் எழுப்புவோம்’’ என்றார்.

மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா ஒரு கருத்தரங்கத்தில் பேசுகையில், ‘‘ சிறு மற்றும் குறு வர்த்தகர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்தேன். எதிர்பாராதவிதமாக ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி.யை அமல்படுத்திவிட்டனர்.

ஒரு மாநிலத்திற்கு 200 தொழில்களில் மட்டும் இதை பரீட்சாத்திர முறையில் அமல்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இதிலும் 30 சதவீதம் தோல்வி ஏற்பட்டது. இதன் பின் 3 வாரங்கள் கழித்து மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆனால், அவரால் சூழ்நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் ஜிஎஸ்டி.க்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால், திட்டமிட்டு முறையாக ஜிஎஸ்டி.யை அமல்படுத்திருக்க வேண்டும்’’ என்றார்.