ஹரிதுவார்:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கயிந்தி காத்தா கிராமம். இங்கு 800 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆதார் அட்டை பெறுவதற்காக இப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தனியார் முகமையிடம் தங்களது ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினர்.

இவர்களது பெயர்கள் ஆதார் எண் பட்டியலில் இடம்பெற்றது. இதில் அனைவருக்கும் பிறந்த தேதி ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஒரு குடும்பத்தின் பாட்டிக்கு வயது 22 என்றும், சில குழ ந்தைகளின் வயது 15 மதல் 60 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது ஆதார் எண் அனைத்து அரசு நலத்திட்டங்களை பெறவும், கல்வி மற்றும் சுகாதார துறை உள்ளிட்டவற்றுக்கும் அத்தியாவசிய அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அத்தகைய ஆதார் அட்டையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தவறுகளால் அந்த கிராம மக்கள் தங்களுக்கு நலத்திட்டங்கள் பாதிக்கப்படுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

இந்த தவறுகளை ஏற்றுக் கொள்ள ஆதார் தயாரிப்பு அமைப்பான யுஐடிஏஐ மறுத்துவிட்டது. நாடு முழுவதும் அதிக அளவில் இது குறித்த புகார்கள் எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உ.பி மாநில் ஆக்ராவில் அருகருகே உள்ள 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் பிறந்த தேதி ஜனவரி 1 என குறிப்பிடப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டிருந்தது.

ஆதார் குளறுபடி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் ரூ. 34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் பணி தாமதமாகி வருகிறது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவசர கூட்டம் நடத்தி இது குறித்து ஆலோசனை மேற்காண்டார். இந்த மாநிலத்தில் உள்ள 1.5 லட்சம் விவசாயிகளின் ஆதார் விபரங்கள் சரியான முறையில் இல்லை. இந்த நிலையில் ஆதாரை எப்படி தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை எப்படி கூற முடியும்?.