டெல்லி: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் உள்பட 4 நீதிபதிகள் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2 வழக்கறிஞர்கள் பெயர்கள் உள்பட 4 வழக்கறிஞர்கள் பெயர்கள் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது தலைமை நீதிபதியையும் சேர்த்து 57 நீதிபதிகளே பணியில் உள்ளனர். இன்னும் 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பக்கோரி நீதிபதிகளும், வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்கறிஞர்கள் பெயரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. மேலும், இரு வழக்கறிஞர்களை மும்பை, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சஞ்சீவ் கன்னா ஆகியோா் இடம் பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்களான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளனா்.
அதுபோல, வழக்கறிஞர்கள் மஞ்சுஷா அஜய் தேஷ்பாண்டே மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாகவும், குருபரஹள்ளி வெங்கடராமரெட்டி அரவிந்த் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொலீஜியம் தெரிவித்து உள்ளது.