சென்னை: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை செய்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்  ‘சஸ்பெண்டு’  செய்யப்படுவார் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு,  செந்தில் பாலாஜி டாஸ்மாக் அமைச்சராக  பதவி ஏற்றதும், டாஸ்மாக் மதுபான கடைகளில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறின. டாஸ்மாக் மதுபான் கடைகள் அதிகரிப்பு மற்றும் ஏராளமான சட்டவிரோத பார்கள் திறக்கப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டல் மதுபானத்துக்கும் எம்ஆர்பி விலையை விட ரூ.10 அதிகம் வசூலிக்கப்பட்டது. இதனால் அவரை பத்து ரூபா பாலாஜி என்று குடிமக்கள் அழைத்து வந்தனர். இநத் முறைகேட்டை எதிர்ப்பவர்களை காவல்துறையினரைக் கொண்டு தாக்கும் அவலமும் அரங்கேறியது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில்,  மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட் என டாஸ்மாக் நிர்வாகி விசாகன் ஐஏஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபான கடைகளில்,  நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ. 10 அல்லது அதற்கு மேல் மது விற்பனை செய்யும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.   மேலும், கூடுதல் விலைக்கு விற்கும் கடை ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.