டில்லி

ரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது

தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று அதனை நிராகரித்து, அதற்குப் பதில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றம் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்க்க ஜாதகத்தைக் கேட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து, அந்தப் பெண்ணிடம் உடலுறவு கொண்டிருக்கிறார். பிறகு அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளாமல் கைவிட்டுவிட்டார். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருப்பது தெரிந்ததும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகச் சொல்ல இருக்கிறார்.

வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அந்தப் பெண் செவ்வாய் தோஷம் உள்ளவரா என்று அறிய அவரது ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் என்றும் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவருக்கு இருவரின் ஜாதகத்தையும் அனுப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி கடந்த மே 23ஆம் தேதி இரண்டு பேரின் ஜாதகத்தையும் 10 நாளில் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவரிடம் வழங்குமாறு காலக்கெடு விதித்துள்ளது. மேலும் ஜாதகம் பார்த்து, அதன் அறிக்கையை 3 வாரங்களில் சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜோதிடவியல் துறை தலைவருக்கு உத்தரவிட்டது.

ஆனால்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறினார். அதன்படி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சுதன்ஷு துலியா தலைமையிலான அமர்வு அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, அந்த பெண் செவ்வாய் தோஷம் உள்ளவராக என்பதை அறிய இரு தரப்பினரும் ஜாதகத்தை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியது ஏன் என்பது புரியவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. நேற்று நீதிமன்ற விடுமுறை நாளான சனிக்கிழமை என்றாலும் இந்த வழக்கை விசாரிப்பதற்காகவே நீதிமன்றம் கூடியது குறிப்பிடத்தக்கது.