பாலசோர்

யில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

நேற்று முன் தினம் ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்குத் தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.  இதுவரை இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். `

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்திருக்கிறது. தண்டவாளத்தைச் சீரமைக்க முயன்று கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ரயில்வே சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூர்-டெல்லி சம்பர்க் கிராந்தி விரைவு ரயில், மைசூரிலுள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாகச் சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.

அதையொட்டி, இந்த சிக்னல் குறைபாடு குறித்து எச்சரித்து இந்திய ரயில்வே தலைமையகத்துக்கு, தென் மேற்கு ரயில்வேயின் தலைமைச் செயல்பாட்டு மேலாளர் பி.சி.எம்.ஹரிசங்கர் வர்மா கடிதம் எழுதியிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த கடிதத்தில்,`ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் ஏற்படவிருந்த விபத்து சம்பவம் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் குறிக்கிறது. எலெக்ட்ரானிக் சிக்னல் பராமரிப்பாளர், எலெக்ட்ரானிக் இன்டர்லாக் முறையைத் தவிர்த்துவிட்டிருக்கிறார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே அந்தக் கடிதத்தை உரிய முறையில் பரிசீலித்துக் கண்காணித்திருந்தால், இந்தக் கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.