டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்‍கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணம் செய்துகொள்ள தயாரா என, தான் கேள்வி எழுப்பவில்லை, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது என்று  உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்‍கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர், மோகித் சுபாஷ் சவான். இவர் பள்ளி மாணவியை  பாலியய்ல வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனார். இந்த நிகழ்வு நடைபெற்றபோது, அந்தச் சிறுமிக்கு வயது 16 (மைனர்), குற்றவாளிக்கு வயது 18 என்றும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குற்றவாளியான மோகித், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவின் விசாரணையின்போது,  குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,  ‘நீங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய அந்தப் பெண்ணை திருமணம் செய்யத் தயாரா?’ என்று கேட்டதாக  தகவல்கள் வெளியாகின. மேலும், ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதாக இருந்தால் உதவி செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் அரசு வேலையை இழந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததற்காக சிறை செல்ல நேரிடும்’ என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

தலைமைநீதிபதியின் இந்த கருத்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. , தலைமை நீதிபதி பாப்டே, தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திருமதி. பிருந்தா காரத் அவருக்‍கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு தலைமை நீதிபதி இன்று விளக்கம் அளித்துள்ளார். விசாரணையின்போது, தான் அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை என்று மறுத்துள்ள  தலைமை நீதிபதி .எஸ்.ஏ.பாப்டே, தான் கூறியதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டு,  செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், தான், பெண்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.