டில்லி

ராமரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அயோத்தியில் தற்போது வசிக்கிறார்களா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி இடித்து இந்து மத ஆர்வலர்களால் நொறுக்கப்பட்டது. அதையொட்டி தொடரப்பட்ட 4 வழக்கில் அலகாபாத் உச்சநீதிமன்றம் கடந்த 2010 ஆம் வருடம் அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று சமமான  பாகமாக பிரிக்கபட்டு சன்னி வக்ஃப் வாரியம், நிமோகி அகாரா மற்றும் ராம் லல்லா அகியோருக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

அதை எதிர்த்து 14 மேல் முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அவற்றின் ஒருங்கிணைந்த விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை தினசரி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இதில் ராம் லல்லா விரஜ்மான் என்னும் ராமர் கோவில் அமைப்பாளர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதாடி வருகிறார். அவர் தனது வாதத்தில், “இந்த விக்கிரகங்கள் இப்போது நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த  விக்கிரகங்கள் நிறுவப்படும் முன்பிருந்தே இங்கு ராமர் வழிபாடு நடந்து வந்துள்ளது. இந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்பதே உண்மையாகும். அவருடைய பிரதிநிதியாக விக்கிரகம் சார்பில் ராம் லல்லா விரஜ்மான் வழக்கு தொடர்ந்துள்ளது” என தெரிவித்தார்.

இதற்கு ரஞ்சன் கோகாய், பாப்டே, சந்திரசூட், அஷோக் பூஷன் மற்றும் நாசர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, “ராமரின் வம்சமான ரகுவம்சம் வழி வந்தவர்கள் யாராவது அயோத்தியில் வசிக்கிறார்களா? இந்த கேள்வி ஒரு ஆர்வத்தின்  அடிப்படையில் கேட்கப்படுகிறது” என வினா எழுப்பியது. இதற்கு வழக்கறிஞர் பராசரன். “எனக்கு இது பற்றித் தெரியாது. அதை விரைவில் கண்டறிகிறேன்” என பதிலளித்துள்ளார்.

இந்த வழக்கு இந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தொடர உள்ளது.