ரியாத்: பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அது தனது கண்காணிப்பின் கீழ்தான் நடைபெற்றதாகவும் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரு டாகுமெண்டரிக்காக அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டாகுமெண்டரி அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்தாண்டு துருக்கி தலைநகரம் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில், ஆவணங்களை சமர்ப்பிக்க ஜமால் கஷோகி சென்றபோது, தூதரகத்திற்கு உள்ளே வைத்து சவூதி அதிகாரிகளால் கொல்லப்பட்டார். அப்போதே சவூதி பட்டத்து இளவரசரின் பெயர் அடிபட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு நாடுகள் அவரைத்தான் குற்றம் சாட்டின. ஆனாலும், சவூதி அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இளவரசரும் இதுதொடர்பாக வெளிப்படையாக வாய் திறக்கவில்லை. மேலும், அவர் அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

அவரின் நற்பெயர் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தனது கண்காணிப்பின் கீழ்தான் அந்த சம்பவம் நடந்ததால், தானே அந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுவது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.