சென்னை: சனிப்பெயர்ச்சி நாளை (டிசம்பர் 17ந்தேதி) நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் மாதம் தான் சனிப்பெயர்ச்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப் பெயர்ச்சியானது இந்த வருடம் நிகழவுள்ளது. அது, தை மாதம் 3 ம் தேதி ஜனவரி 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 04 நிமிடத்தில் (28 நாழிகை 30 வினாடி) கர்மகாரனான சனிபகவான் கடந்த இரண்டரை வருடங்களாக மகர ராசியில் பயணித்துக் கொண்டிருந்தவர், அடுத்து தன்னுடைய மூலத்திரிகோண ராசியாகிய கும்ப ராசியில் அவிட்டம் 3 ம் பாதத்தில் பெயர்ச்சி ஆக உள்ளார் என ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், சனிஸ்வரன் ஸ்தலமான திருநள்ளாறு கோவில் சார்பில், வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் மாதம்தான் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சனி ஸ்தலமாக, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது உலகப்புகர் பெற்றது. இங்கு நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும் சனிக்கிழமை தோறும் இங்கு கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
பொதுவாக சனிப்பெயர்ச்சியானது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெயர்வது வழக்கம். அதன்படி, தற்போது, சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்படி, ஜனவரி 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி எப்போது என்பது குறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.
அதன்படி, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத் துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.