சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தற்போதுள்ள 30 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சாத்தூர் தொகுதி அதிமுக எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.