சென்னை: அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை; அதனால் போட்டியில்லை என்று அறிவித்தபுதிய நீதிக்கட்சி,  பாஜகவை தவிர அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் பங்கேற்க வேண்டாம் என தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவித்து உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த புதிய நீதிக்கட்சிக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்க மறுத்து விட்டது. இதனால், விரக்தியடைந்த புதிய நீதிக்கட்சி தமிழக  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என புதிய நீதிக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டது.

இதுதொடர்பாக   புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2000- ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தொடர்ந்து இருந்து வரும் நிலையில், 2014- ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவியது. 2019- ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிட்டு, வெறும் 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவியது. இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து மேற்கண்ட கூட்டணியில் புதிய நீதிக்கட்சி கூட்டணியில் இருக்கும் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடியாரின் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தும் களமிறங்கி தொடர்ந்து பணியாற்றி புதிய நீதிக்கட்சி விரும்பி முடிவுஎடுத்தது ஆனால், நாங்கள் , கேட்கப்பட்ட தொகுதிகள் ஏதும் ஒதுக்கித்தரப்படவில்லை. கேட்கப்பட்ட எண்ணிக்கையிலும் தொகுதிகள் ஒதுக்கித்தரப்படவில்லை. எனவே, இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை என அறிவித்தது.

இந்த நிலையில், இன்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை பாஜக போட்டியிடும், துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதி தவிர மற்ற எந்தவொரு தொகுதியிலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக புதிய நீதிக்கட்சி  தேர்தல் பணியாற்றாது என அறிவித்து உள்ளது.