கமல் – ரஜினிக்கு சத்யராஜ் எதிர்ப்பு!

Must read

சென்னை:

கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு நடிகர் சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில்   சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், சுப.வீரபாண்டியன், திருச்சி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “எனக்கு உணர்வுகளால் மட்டுமே பேசத் தெரியும். புள்ளி விவரங்களால் பேசத் தெரியாது. நதியே சமூகத்திற்கு சொந்தமில்லாமல் ஆகிவிட்டது. முதலில் நதியை சமூகத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு இடத்தில் உற்பத்தியானால் அந்த நதி அவர்களுக்குச் சொந்தமாகிவிடுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதாக இல்லை. தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்…  தண்ணீர் நமக்கான பிரச்சினை இல்லை என்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், திரைத்துறையினர் நினைக்க வேண்டாம். ஒருநாளில் அது நம் தலையின் மீதுதான் விழும்.  ஆகவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும், ““பிரபலமான திரைப்பட நடிகராக இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைப்பது தவறு. அப்படி  தனக்கு எல்லாம் தெரியும் என அந்த நடிகர் நினைத்துக்கொள்வதும் தவறு. நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு” என்றார்.

அத்துடன், “அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது” என்று பேசினார்.

ரஜினி, கமல் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ் இவ்வாறு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

More articles

Latest article