சென்னை: தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுசெய்தாக தொடரப்பட்ட வழக்கில்  சதுர்வேதியை சாமியார் வரும் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுமார் 20ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது. இந்த நிர்வகித்த வருபவர் சதுர்வேதி சாமியார் என்பவர்.  முதுகலை பட்டதாரியான இவருக்கு  வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது.  இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார்.  அப்போது பல்வேறு சித்து விளையாட்டுக்களை செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால், அவரைக் காணவும், அவரது சொற்பொழிவை கேட்கவும்  ஏராளமானோர் வருவது வழக்கம்.

இவரது பேச்சில் மயங்கிய  சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர்  தனது மனைவுயுடன் வந்து, தனது தொழில்பிரச்சினை குறித்து ஆலோசனை கேட்டார். அதற்கு சாமியார், தொழில்அதிபர் வீட்டில் சில பூஜைகளை செய்தால் சரியாகும் என கூறி, தொழில் அதிபர் வீட்டில்,  பல்வேறு பூஜைகள் செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில் தொழில் அதிபரின் வீட்டை அபகரித்து கொண்டது இல்லாமல், தொழில் அதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளையும் பூஜை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், தொழில்அதிபரின் மனைவியையும், மகளையும் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்றது. இதுதொடர்பா காவல் நிலையத்தில் தொழில்அதிபர் புகார் கொடுத்தார். இதையடுத்து சாமியார்மீது,  பாலியல் வன்புணர்வு,  கடத்தல், சிறை வைத்தல் என பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து, சென்னை காவல்துறையினர் சாமியார் சதுர்வேதியை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த சதுர்வேதி சாமியார் தலைமறைவானர்.  இதுவரை அவரை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  அவரை தேடப்படும் குற்றவாளியாக மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த வழக்கு 20 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தொழிலதிபர் மனைவியை கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.