மதுரை: என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது,  சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு  பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் (தந்தை -மகன்) காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், சாத்தான்குளத்தில் அப்போது பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஸ்ரீதர், சிறையில் இருக்கும் தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்று வருவதாக, நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில்,  ‘சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை ஏ2 முதல் ஏ9 வரை குற்றம்சாட்டப்பட்டவர்களே அடித்துக் கொன்றனர். கைதான என்னை தவிர்த்து மற்ற 8 பேருமே இந்த கொலையை செய்தார்கள்.நான் செய்யவில்லை. அந்த 8 பேரும் என்னை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த மார்ச் 26ஆம் தேதி சிறையில் காலை 6.30 மணியளவில் தன்னை தாக்க வந்தார்கள் என்றும், மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போதும், வரும்போதும் பிற குற்றவாளிகள் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.