மதுரை: சாத்தான்குளம் தந்தைமகன் கொலை வழக்கின் விசாரணையின்போது, ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்பாக பெண் காவலரின் புதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர் அன்றைய தினம் காவல் நிலையத்திலேயே இல்லை என கூறி வரும் நிலையில், பெண் காவலர் அவர் காவல்நிலையத்தில்தான் இருந்தார் என்று கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப் பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை எற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ராகு கணேசன் ஆகியோர் உட்பட 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இநத் வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, சாத்தான்குளம் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். அப்போது, சம்பவம் நடந்த போது ஆய்வாளர் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் பணியில் தான் இருந்தார்’ என சாட்சியம் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் முதலில் , சம்பவம் நடக்கும் போது தான் அந்த இடத்தில் இல்லை என வாதிட்டு வரும் நிலையில், சாத்தன் குளம் சம்பவத்தின் போது உடன் இருந்த பெண் காவலர், அவர் காவல்நிலையத்தில்தான் இருந்தார் என்று கூறியிருப்பது, வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.