சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்து  உள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் முடிந்து, மேயர், கவுன்சிலர்கள் பணியாற்றி வரும் நிலையில், மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனப்டி,  சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். இந்த மாமன்ற கூட்டத்திற்கு முன்பாக மண்டல குழு கூட்டம் மற்றும் நிலைக் குழுக்களின் கூட்டம் நடைபெற வேண்டும். மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மாமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பிறகு மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சி உள்ள 15 மண்டலங்களின் மண்டல குழு கூட்டங்களை மாதம் தோறும் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி 15 மண்டலங்களின் மண்டல குழு கூட்டங்கள் மண்டல தலைவர்கள் தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் தவிர்த்து யாரும் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான  சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் பிரியா கூறியுள்ளார்.

ஜனவரி 4ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமன்ற கூட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு தேவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.