மதுரை: காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை எற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கு காவல்துறையினரால்  இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி ஜெயராஜ் மனைவி உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் முடிக்க ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால், கொரோனா காரணமாக விசாரணை இழுத்தடிக்கப்பட்ட வந்த நிலையில்,  விசாரணை முடிக்க கால அவகாசம் கோரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விசாரணைகளைத் தொடர்ந்து,  சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கு விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 4 மாதம்  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.