மதுரை : சாத்தான்குளம்  தந்தை மகன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது  ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க சி.பி.ஐ.க்கு மதுரை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கை மீறியதாக  கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் காட்டுத்தனமாக காவலர்களால் தாக்கப்பட்டதால், சிறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடற்கூறு ஆய்வில் அவர்கள் அடித்து கொல்லப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கைதாகியுள்ள காவலர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தடய அறிவியல் துறை சேகரித்துவிட்டதாகவும், வழக்கில் விசாரணையும் முடிவடைந்துவிட்டதால் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக  சிபிஐ பதில் அளிக்க  நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.