1-murdr_hm
கோயமுத்தூர்:
ந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இதையடுத்து,  இந்து முன்னணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் மற்ற இடங்களிலும் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தவித்தனர்.கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவை நகரில் ஓட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள் அனைத்தும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு உள்ளது.
கவுண்டம் பாளையம், ஹவுசிங்யுனிட், கவுண்டர் மில் பகுதி, உருமாண்டம் பாளையம், சுப்பிரமணியம் பாளையம், காசிநஞ்சே கவுண்டன் புதூர், விசுவநாதபுரம், வெள்ளக்கிணறு, துடியலூர், வடமதுரை, நரசிம்மநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.மேட்டுப்பாளையம் பஸ் நிலைய காம்பளக்ஸ், பங்களா மேடு, ஊட்டி மெயின் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
பொள்ளாச்சியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு  உள்ளது. பஸ் போக்குவரத்து குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.
திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் நடைபெற்றது. அதையடுத்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் எம்.ஜி.ஆர். ரோடு, உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் பல்லடம் பகுதியில் ஓடியது.
தாராபுரம் பகுதியிலும் அனைத்து கடைளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதில் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்று வருகிறார்கள்.
நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.