சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில், அவரது பினாமி பெயர்களில் இருந்து, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 65 சொத்துக்களை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கி உள்ளது.
ஏற்கனவே சென்னை பெரம்பூர் ஸ்பெக்டம் மால் உள்பட 1,600 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை கடந்த ஆண்டு முடக்கிய நிலையில், தற்போது மேலும் 300 கோடி ரூபாய் அளவிலான சொத்து அதிரடியாக முடக்கப்பட்டு உள்ளது. இது அவரது குடும்பத்தா ரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் களத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெ.ஆட்சியின்போது, பல்வேறு முறைகேடுகள் செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்து வந்தனர் சசிகலா குடும்பத்தினர். மன்னார்குடி மாபியா என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டும், சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங் கள் உட்பட, 187 இடங்களில், கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையின்போது, சசிகலா குடும்பத்தினர், அவரது பினாமிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், சசிகலா 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும், சோதனையில் சிக்கின.
கிடைத்த ஆவணங்கள் படி, போலி நிறுவனங்கள், சொத்துக்கள் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, 2019 நவம்பரில், வருமான வரித் துறை முடக்கியது.
இந்த நிலையில் மேலும், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை, வருமான வரித் துறையினர் கையகப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக சசிகலாவிற்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு இன்று ஆகஸ்டு 31ந்தேதி வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதை பெற்ற சசிகலா ஆடிப்போய் விட்டாராம்.
சிறை நன்னடத்தை காரணமாக விரைவில் வெளியே வந்துவிடலாம் என கனவில் மிதந்து கொண்டிருந்த சசிகலாவுக்கு, மத்தியஅரசின் இந்த அதிரடி நடவடிக்கை கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.
சிறை தண்டனை முடிந்து அடுத்தஆண்டு (2021) பிப்ரவரியில் விடுதலையாக உள்ள சசிகலா நன்னடத்தை மற்றும் விடுமுறை தினங்களை கணக்கிட்டு, இந்த மாதம் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சியினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது ஆஸ்தான வழக்கறிஞ ரான ராஜா செந்தூர் பாண்டியனும் இதைத்தான் கூறி வருகிறார்.
ஆனால், வருமான வரித்துறை கொடுத்துள்ள அதிர்ச்சி நடவடிக்கை சசிகலாவுக்கு மட்டுமின்றி மன்னார்குடி மாபியா கும்பலுக்கும், அதிமுக விசுவாசிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் வாக்கில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் கொரோனா காலத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
ஆட்சியை கைப்பற்றும் நோக்கோடு, திமுக ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்ட நிலையில், அதிமுகவோ, முதல்வர் வேட்பாளர் யார் என்று குழம்பிக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம்க, சசிகலா விரைவில் அதிமுகவை கைப்பற்றுவார் என எதிர்பார்ப்பு கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளிடையே இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா என்ற தனி ஆளுமைக்கு கிடைத்த வெற்றியைத்தான், தற்போதுவரை, ஓபிஎஸ்-சும், எடப்பாடியும் அனுபவிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க நினைத்த சசிகலாவோ சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இதனால், அவர் சிறையை விட்டு வெளியே வந்து அதிமுகவை கைப்பற்றுவார் என்ற எண்ணம் அதிமுகவில் மேலோங்கி வருகிறது. இதனால், அதிமுகவுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்களால் யூகிக்கப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக அமைச்சரவை மற்றும் மூத்த நிர்வாகிகளுக்குள் இணக்கமான சூழல் இல்லாத நிலையில், எடப்பாடி தலைமையை தக்க வைக்க கொங்கு கோஷ்டி களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறறது.
ஆனால், இதற்கு சசிகலாவின் வருகை பெரும் இடைஞ்சலாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஜெ.இருக்கும்போதே, கட்சியை நடத்தி வந்தவர் சசிகலாதான் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் தற்போது ஆட்சி பதவியிலும், கட்சியிலும் இருப்பவர்கள், சசிகலாவின் ஆதரவாளர்கள் என்பதும் அனைவரும அறிந்ததே. இதனால் சசிகலா வருகை கட்சிக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சசிகலாவை உள்ளே விடாமல் தாங்களே கட்சியை வழிநடத்த ஆர்வம் காட்டும் கொங்கு கோஷ்டிகள், மத்திய அரசின் தயவை நாட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை புரிந்துகொண்ட பாஜக தலைமை, இந்த காலக்கட்டத்தை, தங்களுக்கு சாதகமாக்கும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான், மாற்றுக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு தூண்டில் போட்டு, தங்களது கட்சிக்கு இழுத்து வரும் தமிழக பாஜக, சமீப காலமாக அதிமுக அரசு மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களையும் வீசி வருகிறது.
சமீப காலமாக தமிழக பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அதிமுக பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை ஒரேயடியாக முடக்க பாஜக வியூகம் வகுத்துள்ள தாக கூறப்படுகிறது.
அதை செயல்படுத்தும் எண்ணத்திலேயே, அதிமுகவுக்குள் குழப்பத்தை விளைவித்து வருவதாக வும், மேலும், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் மட்டுமே போட்டி என்று கொக்கரித்தும், அதிமுகவை சீண்டி வருகிறது.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை அவர்களாகவே விலக்கும் வகையில், தமிழக பாஜக வின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக மாறி வருகிறது. இது தமிழக அரசியல் களத்தை மற்ற மாநில ஊடகங்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அரசியல் நோக்கர்கள், பாஜகவின் நடவடிக்கை கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அவற்றை உறுதிப்படுத்துவது போலவே, மத்திய அரசின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகிறது.
மத்தியஅரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும், தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை கணக்கெடுத்து, அவர்களை வழிக்கு கொண்டுவர, தனது ஆயுதமான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐகளைக் கொண்டு ஆட்டத்தை தொடங்க உள்ளதாக தாமரை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமானவர்களை முடக்கிப்போட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையே, சசிகலா மீது பாய்ந்துள்ள வருமான வரித்துறையின் சொத்து முடக்கம் மற்றும் வழக்குகள். தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு ரெய்டுகளை நடத்தவும், எதிர்ப்ப வர்களை முடக்கும் நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காகவே, சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பல மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக அரசுக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில், முதலில் சிறையில் உள்ள சசிகலா மூலம் ஆட்டத்தை தொடங்கி உள்ள வருமான வரித்துறை, அவரது பினாமிகள், பினாமி கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வேறு சில சொத்துக்களை சுட்டிக்காட்டி, சசிகலா உறவினர்கள் பலருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள. ஐதராபாதில் உள்ள, ‘அரிசந்தனா எஸ்டேட்’ நிறுவனத்தின் பெயரில் இருந்த, 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும். இதன் மதிப்பு, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.
இந்த சொத்துக்கள் பரிமாற்றம், 2003 – 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், , கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபல ரிசார்ட் உள்ளிட்ட ஒன்பது சொத்துக்கள் முடக்கப் பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் மீது விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
இதேபோல், மேலும் அடுத்தடுத்து பினாமி சொத்துக்களை சுட்டிக்காட்டி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுதொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் செய்திகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டு களாக கிடப்பில் போடப்பட்ட அதிமுக, திமுக தலைவர்கள் மீதான வழக்குகளை மீண்டும் தூசித் தட்டத் தொடங்கி உள்ளது.
அதிமுகவை வழிக்கு கொண்டு வரவும், சசிகலா மூலம் அதிமுகவில் மீண்டும் பிளவை உருவாக்கி, இரட்டைஇலை சின்னத்தை முடக்கி, அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை உருக் குலைக்க பாஜக தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் வெற்றிக்கு இரட்டை இலை சின்னம்தான் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த சின்னத்தை முடக்கினால், அதிமுக களையிழந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சசிகலாவுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் விசுவாசம் உள்ளதால், அதை உடைக்கும் நோக்கில், அவர்மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தி, அரசியலில் புக முடியாதவாறு நடவடிக்கை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு திறமையான மற்றும் தனித்துவமான தலைமை இல்லாத நிலையில், முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்-ஐ பகடைக்காயாக்கி, ஆட்டத்தை ஆடவும் பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கான பேரங்கள் முடிவடைந்து விட்டதாகவும் தாமரை வட்டாரத் தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழக மக்களிடையே திமுக, அதிமுக கட்சிகள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுகவை கட்டுப்படுத்த மீண்டும் 2ஜி வழக்கு விசாரணையை தீவிரப் படுத்தவும் மத்திய சட்ட அமைச்சகம் உத்தர விட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது சில இடங்களை கைப்பற்றி, சட்டப்பேரவையில், பாஜக இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மோடிஅரசு, இந்த அதிரடி ஆட்டத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதுவரை தமிழக்ததில் காலூன்ற முடியாத பாரதிய ஜனதா கட்சி, தமிழக அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் குளிர்காய எண்ணி உள்ளது. இதை நினைத்துக்கொண்டுதான், தமிழகத்தில் நோட்டா வாக்குகளை மட்டுமே பெற்று வரும் பாரதிய ஜனதா கட்சி, தற்போது 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கொக்கரித்துக்கொண்டு திரிகிறது…
காலம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது..